கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை! நாய் வளர்ப்புக்கு கெடுபிடி விதிகள்!
Stray Dogs: உத்தரப் பிரதேசத்தில், பொதுமக்களை மீண்டும் கடிக்கும் தெருநாய்களை வாழ்நாள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்க யோகி ஆதித்யநாத் அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.

நாய்களுக்கு ஆயுள் தண்டனை
உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களைக் கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட உள்ளது. ஆம், மீண்டும் மீண்டும் மனிதர்களை கடிக்கும் தெருநாய்களை, அவற்றின் வாழ்நாள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்க புதிய விதிகளை யோகி ஆதித்யநாத் அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது.
உ.பி. அரசின் புதிய விதிகள் என்ன?
செப்டம்பர் 10 அன்று, உத்தரப் பிரதேச அரசு அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகளுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதன் முக்கிய அம்சங்கள்:
முதல்முறை கடிக்கும் நாய்: எந்தவொரு தூண்டுதலும் இன்றி ஒரு நாயானது மனிதர்களைக் கடித்தால், அந்த நாய் 10 நாட்களுக்கு விலங்குகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
கருத்தடை: கருத்தடை செய்யப்படாத நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, அதன் உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படும். இதன் மூலம் அதன் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.
இரண்டாவது முறை கடிக்கும் நாய்: அதே நாய் மீண்டும் ஒரு மனிதனை இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும்.
நாய்களைத் தத்தெடுப்பவர்களுக்கான நிபந்தனைகள்
இப்படி அடைக்கப்பட்ட நாய்களை யாராவது தத்தெடுக்க விரும்பினால், அவர்கள் அந்த நாயை அதன் வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வதாக ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும், அந்த நாயை கைவிட மாட்டோம் என்றும், மீண்டும் தெருக்களில் விடமாட்டோம் என்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
டெல்லி அரசின் நடவடிக்கை
இந்த நடவடிக்கையானது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விலங்குகளின் நலனையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, காப்பகங்களில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு, விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.