TVK Vijay: கரூரில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தும், விளக்கம் அளிக்கும் வகையிலும் தவெக தலைவர் விஜய் கண்ணீருடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்தி பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தனை உயிர்கள் பறிபோன நிலையில், விஜய் அவர்களை நேரில் வந்துகூட பார்க்கவில்லை என்று திமுக முக்கிய தலைவர்கள் பலரும் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். மேலும் சிலர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
கரூரில் மட்டும் நடந்தது எப்படி..?
இந்நிலையில் விஜய் இது தொடர்பாக கலங்கிய கண்களுடன் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நடக்கக் கூடாத சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. சுமார் 5 மாவட்டங்களில் நாங்கள் கூட்டம் நடத்திவிட்டோம். அப்பொழுதெல்லாம் நடக்காத ஒரு நிகழ்வு கரூரில் நடைபெற்றுள்ளது. கரூரில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது எப்படி? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆறுதல் கூற செல்லாதது ஏன்..?
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் சென்று பேசிவிட்டு வருகிறோம். அவ்வளவு தான். அதைவிட நாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை. அசம்பாவிதம் நடைபெற்றவுடன் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற நினைத்தேன். ஆனால் மேற்கொண்டு அசம்பாவிதம் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே நான் நேரில் செல்லவில்லை. எனது அரசியல் பயணம் இன்றும் பலமாக தொடரும்.
சிஎம் சார் உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னுடன் மோதுங்கள். மக்களை விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
