தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருவாரூரில் நடத்திய பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தார்.
தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்களை சந்தித்து பிரசாரம் நடத்துகிறார். இன்று நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அதற்குப் பிறகு, திருவாரூரில் பிரச்சாரம் செய்ய வருகை தந்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு கிரைன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தின் மீது ஏறி, பிறகு பிரசாரம் செய்த இடத்துக்காக மீண்டும் புறப்பட்டார். முன்னதாக மேம்பாலம் பகுதியில், தவெக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் விஜய்க்கு முழுமையான மரியாதை வழங்கப்பட்டது.
திருவாரூரில் தெற்கு வீதியில் நடைபெறும் பிரசார இடத்தில் தவெகவினர் கூட்டமாக இருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ளோர் அந்த பெண்ணை தூக்கி சென்று முதலுதவி அளித்தனர். அதுமட்டுமின்றி அருகே உள்ள கோவில் ஒன்றின் மேல் தவெக தொண்டர்கள் ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய விஜய், "திருவாரூர் மாவட்டம்தான் அவங்களுடைய சொந்த மாவட்டம் என பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாக காய்கிறது. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தான் மனதிற்கு வரும். நீண்ட நாள் ஓடமால் இருந்த தேரை ஓட வைத்தது நான் தான் என ஒருவர் பெருமையாக பேசி வந்தார்.
ஆனால் அவருடைய மகன் மாண்புமிகு ஸ்டாலின், நல்லா ஓட வேண்டிய தமிழ்நாட்டு தேரை நான்கு புறம் கட்டைய போட்டு அப்படியே நிப்பாட்டிவிட்டார்." என கடும் விமர்சனத்தை வைத்தார் விஜய். தொடர்ந்து பேசிய அவர், "'சி.எம் சார் எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பேரை வைக்கணும்னு சொல்றீங்க.
ஆனா, உங்க அப்பா பிறந்த ஊர்ல ஒரு சாலை வசதி கூட சரியா இல்லையே சார். திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கணும் போல இருக்கு. உங்களுடன் ஸ்டாலின் என்பதை உங்க குடும்பத்துக்கு மட்டும் தான் சொல்லிக்கணும்" என்று முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை காட்டமாக விமர்சித்து தனது உரையை சுருக்கமாக முடித்தார் விஜய்.
