கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. நீதிபதி விமர்சனம் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவுக்கு மத்தியில், தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்.
TVK leader Vijay next plan : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக பிரச்சாரம் செய்ய திட்டம் வகுத்திருந்தார். அந்த வகையில் திருச்சியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அரியலூர், திருவாரூர், நாகை என இரண்டு வாரங்களாக மக்களை சந்தித்து திமுக, பாஜகவை விமர்சித்தும் அந்த அந்த மாவட்டங்களில் நிறைவேற்றப்படாத திட்டங்களையும் பட்டியலிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அளவுக்கதிகமான மக்கள் கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
அவதூறு கருத்து - தவெக தொண்டர்கள் கைது
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெக முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் இவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர்.
இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் போது தவெகவின் செயல்பாடுகளை விமர்சித்து நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லையெனவும், கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவினர் ஓடி விட்டதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நீதிபதியின் உத்தரவை சமூகவலைதளங்களில் தவெகவினர் விமர்சித்து பதிவு செய்து வருகிறார்கள். இதனையடுத்து அந்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். புதுக்கோட்டை சேர்ந்த கண்ணன் கிருஷ்ணகிரியை மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி டேவிட் சென்னையைச் சேர்ந்த சசிகுமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை தவெக நிர்வாகிகள் யாரும் சந்திக்காமல் உள்ளன்னர். தவெகவின் அடுத்த கட்ட செயல்பாடுகளும் முடங்கியுள்ளது.
மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் விஜய்
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு பகுதி மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். யாரும் சோர்ந்து போக வேண்டாம் எனவும், விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே விரைவில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு விஜய் அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
