உள்நாட்டில் கிடைத்த முதலீட்டையே தக்கவைக்க முடியாத முதல்வர் உலக முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வது வேடிக்கையாக இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழு அந்நாட்டில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகளிலும் அதனால் உரவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் பாதியளவு கூட செயல்பாட்டிற்கு வராத நிலையில் முதலமைச்சரின் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை; சுக்குநூறாக நொறுங்கியது

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின் போது ரூ.6,100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளும் அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் என முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளின் பட்டியல் நீள்கிறதே தவிர, அங்கு ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகளும், உறுதியளித்த வேலைவாய்ப்புகளும் சிறிதளவும் முன்னேற்றம் இன்றி அதே இடத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

அதே போல உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விளம்பர மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி உள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது என்ற விவரங்களை வெளியிட தமிழக அரசு மறுக்கிறது.

துரைமுருகனை முதலமைச்சர் ஆக்குங்கள்; திமுக.வுக்கு சீமான் அறிவுரை

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கிய நிறுவனங்களும், தற்போது அண்டை மாநிலங்களை நோக்கி செல்லும் சூழல் இருப்பதாக தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அண்மையில் தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய பிரதேச முதலமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று கோவை, திருப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இடம் பெயர திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே, திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழத்தில் தொழில் தொடங்கி உள்ளன? அதன் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது? என்ற விவரங்களை வெளியிடுவதோடு, தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லாத வகையில், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.