திருச்சியில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நவீன மருத்துவ உபகரணங்கள், ஸ்கேன் கருவிகள் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களுக்கும் இங்கு சிறப்பு மருத்துவர்களைக்கொண்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், புதுகை என பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

 இத்தனை சிறப்பு பெற்ற இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி டீன் ஆக இருப்பவர் டாக்டர் சாரதா. இவர் நேற்று முன்தினம் இங்கு பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பணியில் இருந்த டாக்டர்கள் சோதித்தனர். இதைத்தொடர்ந்து டீன் சாரதா உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை உள்நோயாளியாக அனுமதிக்கும்படி கூற, அதன்படி அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

தற்போது வரை அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவனையில் சிறப்பு மருத்துவ பயிற்சி முடித்த பல மருத்துவர்கள் இருக்கும் நிலையில் டீன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவது அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அரசாங்கம் கோடி கோடியாக செலவு செய்து இத்தனை வசதிகள் செய்து கொடுத்துள்ளது. இதற்கு தலைமை தாங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியே அரசு மருத்துவமனையையும், அங்குள்ள டாக்டர்களையும் நம்பாமல் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லலாமா? என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.