10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ்களில் மாணவரின் ஜாதியை குறிப்பிடாமல் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
மாணவரின் மாற்றுச்சான்றிதழில், ‘வருவாய் துறை வழங்கிய ஜாதிச் சான்றிதழை பார்க்கலாம்’ என்பதை மட்டும் குறிப்பிட வேண்டுமென்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த் துறை, வட்டாட்சியர் அலுவலகங்கள் வாயிலாக ஜாதிச் சான்றிதழ்கள் தனியாக வழங்கப்பட்டு வருகிறது. தனியாக ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் மாற்றுச் சான்றிதழில் ஜாதியை குறிப்பிட தேவையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

மாணவரோ, மாணவரின் பெற்றோரோ விரும்பினால் ‘சாதியற்றவர்’ என்று குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதி தொடர்பான கேள்விகளை நிரப்ப வேண்டாம் என்று மாணவரோ, பெற்றோரோ விருப்பம் தெரிவித்தால் அந்த இடங்களை காலியாக விட்டு மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த அறிவுறுத்தல்களை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கடைப்பிடித்து மாற்றுச்சான்றிதழ்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்