கரூர் பொதுக்கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து த.வெ.க. வைத்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், மின்வெட்டு, தடியடி போன்ற குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என காணொளி காட்சிகளுடன் அரசு விளக்கியது.

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, தமிழ்நாட்டுக் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முன்வைத்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு இன்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான திருமதி. அமுதா அவர்கள் இந்தக் விளக்கத்தை அளித்தார்.

வீடியோ ஆதாரங்கள்

செய்தியாளர்களைச் சந்தித்த திருமதி. அமுதா, த.வெ.க. தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் பட்டியலிட்டு, அவை உண்மையில்லை என்பதை விளக்கினார். இதற்கான ஆதாரமாக, சம்பவத்தன்று பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக வெளியான காணொளி காட்சிகளை அவர் திரையிட்டுக் காட்டினார்.

குறிப்பாக, "கேட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை," "விஜய் பேசத் தொடங்கியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது," மற்றும் “போலீசார் தடியடி நடத்தினர்” உள்ளிட்ட த.வெ.க.வின் முக்கியக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

ஆம்புலென்ஸ் நுழைந்தது ஏன்?

கூட்டத்தில் ஆம்புலென்ஸ் வாகனங்கள் அடிக்கடி வந்தது ஏன் என்பதற்கு சுகாதாரச் செயலாளர் பதில் அளித்தார். 7.15 மணி அளவில் அவசர உதவி கோரி 108 க்கு அழைப்பு வந்த பிறகுதான் ஆம்புலென்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக் குறைபாடு குறித்த புகார்களை மறுத்த ஏடிஜிபி, 50 பேருக்கு ஒரு காவலர் என்ற வழக்கத்திற்கு மாற்றாக 20 பேருக்கு ஒரு காவலர் என 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கூட்டம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர் என்றார். மேலும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர் என்றும் கூறினார்.

காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஜய்

கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், தன் பேச்சைத் தொடங்கும் முன்பு காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கும் காட்சியையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது. "அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு, கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ளூர் போலீசார் காட்டிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தபின், இப்போது அரசாங்கத்தின் மீது பழிகூறுவது நியாயமில்லை" என்று தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். கூறினார்.

மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான உண்மையான காரணங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆதார வெளியீடு, கரூர் விபத்து குறித்த அரசியல் விவாதத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.