கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த பாஜக எம்.பி. அநுராக் தாக்கூர், உளவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என குற்றம் சாட்டினார். இந்த துயரச் சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
கரூரில் கூட்ட நெரிசல் மரணங்களுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். உளவுத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் என்ன செய்துகொண்டு இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கரூர் சென்றுள்ள பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
உளவுத்துறை என்ன செய்கிறது?
“இங்கே உளவுத்துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது? விஜய் தாமதமாக வந்தார் என்றால்... ஏற்கெனவே ஆயிரக்கணக்கானவர்கள் கூடிவிட்டார்கள். அதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது? மாவட்ட நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பல தீவிரமான கேள்விகள் எழுகின்றன.”
"தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு அருகில் நிற்பது மிகவும் கடினமான ஒன்று. ஒன்றரை வயது குழந்தை ஒன்று தன் அத்தையின் கைகளில் மரணமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?" என்று கேள்வியெழுப்பினார்.
திமுக அரசுதான் பொறுப்பு
மேலும் பேசிய அனுராக் தாக்கூர், "இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவதை உள்ளூர் அதிகாரிகள் ஏன் அலட்சியப்படுத்தினார்கள்? இவ்வளவு நெரிசலான இடத்தில் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதித்தது யார்? உள்ளூர் மாவட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். ஏன் திமுக அரசு தன் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது?" என்று திமுக அரசை நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் குறித்து, "உச்ச நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில் சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றும் அனுராக் தாக்கூர் வலியுறுத்தினார்.
