ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வேலை நாள்!
தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் என உணப்பொருள் வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்கள் நடைபெறும் நிலையில், வருகிற 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் அனைத்து விலைக்கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக ஆகஸ்ட் 8ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுற்றறிக்கை மூலம் உணப்பொருள் வழங்கல்துறை ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. யாரெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இங்க பேச மாட்டாரு; ஆனா அங்க பேசுவாரு: மோடியை விளாசிய கார்கே!
இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்களுக்கும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமினை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரைவும், மீதமுள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களும், டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி (நேற்று) மாலை 6.00 மணி வரை 36,06,974 கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.