- Home
- குற்றம்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பாஜக முன்னாள் நிர்வாகியும், பெண் தாதாவுமான அஞ்சலைக்கு, கந்துவட்டி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு 10 லட்ச ரூபாய் வரை நிதி உதவி வழங்கியதாக பெண் தாதாவும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை புளியந்தோப்பு 3வது தெருவை சேர்ந்தவர் மாஜர்கான் (44), ரியல் எஸ்டேட் மற்றும் வீடு புரோக்கர். இவர் தனது குடும்ப செலவுக்காக புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 5வது தெருவை சேர்ந்த பாஜக நிர்வாகியும் பெண் தாதாவுமான அஞ்சலை (48) என்பவரிடம் கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் வட்டிக்கு ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன் பிறகு மாதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 5 மாதம் 8 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
ஆனால், அஞ்சலை மற்றும் அவரது ஆட்கள் மேலும் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மாஜர்கானை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாஜர்கான் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலை உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை பெருநகர 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், அஞ்சலைக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மற்றொரு சட்டப்பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சாதாரண தண்டனையும், ரூ.13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பிரிவின் கீழ் ஓராண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனிடையே அபராத தொகை 13 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்திய அஞ்சலை இன்னும் ஒரு மாதத்துக்குள் மேல்முறையீடு செய்யப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

