கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி.டி.செல்வகுமார் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
Vijay Ex Manager PT Selvakumar Joined DMK : நடிகர் விஜய்யின் முன்னாள் மேனேஜரான பி.டி.செல்வக்குமார் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். கலப்பை மக்கள் இயக்கத் தலைவரான பி.டி.செல்வக்குமார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்திருக்கிறார். இவர் விஜய்யிடம் பல வருடம் மேனேஜராக பணியாற்றினார். இதனால் இவரை தயாரிப்பாளராக்கினார் விஜய். தளபதி நடித்த புலி படத்தை தயாரித்தவர் தான் பி.டி.செல்வக்குமார். அப்படத்தின் தோல்விக்கு பின்னர் விஜய்யிடம் இருந்து விலகினார் செல்வக்குமார். இதையடுத்து ஜெகதீஸ் விஜய்யின் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.டி.செல்வக்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்தமையால் அவர்களோடு இணைந்து பணியாற்ற இருக்கிறேன் என கூறினார். அப்போது, அவரிடம் விஜய்யுடன் சினிமாவில் இணைந்து பணியாற்றிய நீங்கள், தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருடன் பணியாற்றாமல் இங்கு வந்தது ஏன் என கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த செல்வக்குமார், விஜய் ஒரு நடிகராக சிறப்பாக பணியாற்றியதால் சினிமாவில் அவருடன் பயணித்தேன்.

திமுகவில் இணைந்தது ஏன்?
தவெகவில் விஜய்யின் தந்தையையே ஏற்றுக்கொள்ளவில்லை. புதிதாக வந்தவர்களால் என்னைப்போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியாக வழிநடத்துவாரா என்பது எனக்கு தெரியவில்லை. விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் தற்போது அவருடன் இல்லை. விஜய்யை பார்க்க கூட்டம் வரும், ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அவர் கனவில் கூட நினைக்க கூடாது என காட்டமாக பேசி உள்ளார் செல்வக்குமார்.
தொடர்ந்து பேசிய அவர், சுற்றி இருப்பவர்கள் சரியாக அமையாவிட்டால் அவர்கள் விஜய்யை வேறு ஒரு திசைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்பது எனது கருத்து. மாற்றமான அரசியல் கொண்டுவருவேன்னு சொன்னாரு. ரசிகர் மன்றத்தில் தனக்காக உழைத்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுப்பேன் என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் யாருமே ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அல்ல. நிலவு ஒரு நாள் அமாவாசை ஆகும். ஆனால் சூரியன் என்றும் இருக்கும் என கூறி இருக்கிறார்.


