இங்க பேச மாட்டாரு; ஆனா அங்க பேசுவாரு: மோடியை விளாசிய கார்கே!
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்; ஆனால், ராஜஸ்தானில் அரசியல் பேசுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார்
பிரதமர் மோடி ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் அவர், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டங்களிலும் பேசவுள்ளார். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாநிலங்கள் மீது பாஜக கவனம் செலுத்தியுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடியும், பாஜக மூத்த தலைவர்களும் அடுத்தடுத்து விசிட் அடித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்; ஆனால், ராஜஸ்தானில் அரசியல் பேசுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். மக்கள் இப்போது விழிப்புணர்வு அடைந்து விட்டதாகவும், இதுபோன்ற அரசியலை எதிர்த்து அவர்கள் போராடுவார்கள் எனவும் கார்கே தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வாய்திறக்க மறுப்பது தொடர்பாக அவரை விமர்சித்து மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது பேசிய அவர், “ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் நீங்கள் பேச விரும்பவில்லை. ஆனால், ராஜஸ்தானில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும் போது அரசியல் பேச விரும்புகிறீர்கள். இன்று, மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். இதுபோன்ற அரசியலுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்.” என்றார்.
ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் வன்முறை வெடித்துள்ளது. இதனால், அம்மாநிலமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எழுப்பியுள்ளன. இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தி பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது.
பிரதமர் மோடியை அவைக்கு வரவைக்க அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ள எதிர்க்கட்சிகள், இன்றைய தின அலுவல்களில் கறுப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளுமே அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.