ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி!
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தனது பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ராஜஸ்தான் முதல்வர் ட்வீட்டுக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி கொடுத்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு செல்கிறார். ராஜஸ்தானின் சிகார் நகரில் விவசாயிகளுக்கான 1.25 லட்சம் பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திராக்களை அவர் திறந்து வைக்கவுள்ளார். அதன்பிறகு அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தொடர்ந்து, குஜராத் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் கிரீன் பீல்ட் விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
ஆனால், பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு வருவதற்கு முன்பே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் அலுவலகம் தனது மூன்று நிமிட உரையை நீக்கிவிட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி, இன்று நீங்கள் ராஜஸ்தான் வருகிறீர்கள். ஆனால், பிரதமர் அலுவலகம் எனது மூன்று நிமிட உரையை நீக்கி விட்டது. அதனால், உங்களை பேச்சின் மூலம் வரவேற்க முடியாது, எனவே இந்த ட்வீட் மூலம் உங்களை ராஜஸ்தானுக்கு வரவேற்கிறேன்.
ராஜஸ்தான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டு முயற்சியின் விளைவாக இன்று 12 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரிகளின் திட்டச் செலவு ரூ.3,689 கோடி, இதில் ரூ.2,213 கோடி மத்திய அரசின் பங்கும், ரூ.1,476 கோடி மாநில அரசின் பங்கும் உள்ளது. அனைவருக்கும் மாநில அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த நிகழ்ச்சியில் எனது உரையின் மூலம் நான் முன்வைக்கவிருந்த இந்த ட்வீட் மூலம் முன்வைக்கிறேன். ராஜஸ்தான் இளைஞர்களின் கோரிக்கைகளின் பேரில், அக்னிவீர் திட்டத்தை வாபஸ் பெற்று, ராணுவத்தில் நிரந்தர ஆள்சேர்ப்பை முன்பு போல் தொடர வேண்டும்.
மாநில அரசு அதன் கீழ் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் 21 லட்சம் விவசாயிகளின் 15,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு ஒருமுறை தீர்வுத் திட்டம் அனுப்பியுள்ளோம், அதில் விவசாயிகளின் பங்கை வழங்குவோம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கான தீர்மானத்தை ராஜஸ்தான் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு காலதாமதமின்றி இதில் முடிவெடுக்க வேண்டும். தேசிய மருத்து கவுன்சில் வழிகாட்டுதல்களால், மூன்று மாவட்டங்களில் திறக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி எதுவும் கிடைக்கவில்லை. இவை முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியில் கட்டப்படுகின்றன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60% நிதியுதவி அளிக்க வேண்டும்.
கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு (ERCP) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தின் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.” என அசோக் கெலாட் பதிவிட்டிருந்தார்.
பிரதமர் அலுவலகம் தனது மூன்று நிமிட உரையை நீக்கிவிட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ட்வீட்டுக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வழக்கமான நடைமுறைகளின்படி, உங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. உங்களுக்கான உரையும் ஒதுக்கப்பட்டது. ஆனால், உங்களால் வர முடியாது என்று உங்கள் அலுவலகம் கூறியது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பு ராஜஸ்தான் வந்தபோதெல்லாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நீங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீர்கள்.
இன்றைய நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். வளர்ச்சிப் பணிகளின் பெயர் பலகைகளில் உங்களது பெயர் அதிகமாக உள்ளன. உங்களது சமீபத்திய காயம் காரணமாக உங்களுக்கு ஏதேனும் உடல் அசௌகரியம் இல்லாவிட்டால் நீங்கள் தாராளமாக கலந்து கொள்ளலாம். உங்கள் வருகை மதிக்கப்படும்.” என பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ட்வீட் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், சிகாரில் பிரதமர் மோடிக்கு இரண்டு வெவ்வேறு திட்டங்கள் உள்ளன. ஒரு திட்டம் அரசு சார்ந்தது. மற்றொன்று பாஜக சார்ந்தது. ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்கும் வகையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விரும்பினார். வழக்கமான நெறிமுறைகளின்படி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் பங்கேற்பது சரியல்ல.” என தெரிவித்துள்ளன.