தலைமை செயலாளர் இறையன்பு செய்த தரமான சம்பவம்!
தமிழக தலைமை செயலாளர் இறையன்பு செய்த இரண்டு சம்பவங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே தலைமை செயலாளராக யாரை நியமிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு இருந்தது இறையன்பு ஐஏஎஸ்சின் நியமனம். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருக்கும் இறையன்பு ஐஏஎஸ், லட்சக்கணக்கான இளைஞர்களின் ஊக்கசக்தியாக திகழ்ந்து வருவதுடன், பன்முகத்தன்மை வாய்ந்தவர். எனவே, தலைமைச் செயலாளராக இறையன்புவின் நியமனம் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது.
அதன்படி, பதவியேற்றது முதலே சிறப்பான நடவடிக்கைகளை இறையன்பு மேற்கொண்டு வருகிறார். இறையன்பு ஐஏஎஸ், இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார். அந்த பதவியை பிடிக்க பலரும் காய்களை நகர்த்தி வரும் நிலையில், ஓய்வுக்கு பிறகு எந்த பதவியையும் ஏற்கவேண்டாம் என அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறையன்புவின் ஓய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பதவியான தலைமை செயலாளருக்கு நிகரான அந்தஸ்துள்ள தலைமை தகவல் ஆணையர் பதவியை அவருக்கு ஸ்டாலின் கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்த பதவியை இறையன்பு ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், “ஓய்வுக்கு பின்னர் அரசின் மூத்த அதிகாரிகள் எவ்வித முக்கிய பொறுப்பையும் வகிகக்கூடாது என்ற கொள்கை உடையவர் இறையன்பு. அந்த பதவிகளுக்கு தகுதியான முக்கிய நபர்கள் இருப்பர். அவர்களுக்குத்தான் அந்த பதவி செல்ல வேண்டும் என நினைப்பவர் அவர். அதன்படியே, ஓய்வுக்கு பிறகு அரசு தரவிருந்த பதவியையும் இறையன்பு நிராகரித்திருக்கிறார்.” என்கின்றனர்.
அதேபோல், தலைமைச் செயலாளர் இறையன்பு 300க்கும் மேற்பட்ட நூல்களை செய்தித்துறை மூலம் நூலகங்களுக்கு வழங்கியுள்ளார். அவர் பதவியேற்றதும் இரண்டு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டார். அதில் ஒன்று, தான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் தான் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் அரசு சார்பில் வாங்கக் கூடாது என்பது. மற்றொன்று, ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் தவிர்த்து விட வேண்டும் சாதாரண காலை உணவு, இரவு உணவு, இரண்டு காய்கறிகளுடன் மதியம் சைவ உணவே போதுமானது என்ற உத்தரவு.
தமிழகத்தில் ஆதார் பதிவு பாதிப்பு: பொதுமக்கள் சிரமம்!
இந்த நிலையில், ஓய்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தனக்கு வழங்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் ஆகியோர்களிடம் இறையன்பு வழங்கியுள்ளார்.
சென்னையில் செய்தித் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மணிமண்டபங்கள் மற்றும் நூலகங்களை தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடந்த மாதம் ஆய்வு செய்தார். அப்போது, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவுசார்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில், நூலகங்களில் போட்டித் தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அறிவுசார்ந்த புத்தகங்களை இறையன்பு ஐஏஎஸ் வழங்கியுள்ளார்.