தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கும் வெளியிடப்படும். 

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 8ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல்.

11ம் வகுப்பு தேர்வு

இந்நிலையில் 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ மாணவியர் எழுத பதிவு செய்திருந்தனர். தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 7557 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 4755 பேரும், சிறைவாசிகள் 137 பேர் தேர்வு எழுதினர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

அதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். இவர்கள் 4,113 தேர்வு மையங்கள் தேர்வை எழுதினர். ஏற்கனவே பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 3 நாள் முன்னதாக இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

மொத்த தேர்ச்சி சதவிகிதம் 93.80 சதவீதம்

மொத்த தேர்ச்சி சதவிகிதம் 93.80 சதவீதமாகும். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,17,183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 4.14 மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,71, 239 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள் 15,652 பேர் ஆகும்.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி.?

தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள https://results.digilocker.gov.in and www.tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவ மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம், மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்களுக்கும், தனித் தேர்வர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.