நெல்லை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் திருமதி ஷில்பா பிரபாகர். கடந்த மே மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஷில்பா இங்கு மாவட்ட ஆட்சியராக வந்த பிறகு அலுவலக வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதிலும், பொது மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைப்பதிலும் அதிக  கவனம் செலுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிராமங்களில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டிகள், சாலை வசதிகள் போன்றவை முறையாக உள்ளனவா ? என்பதை அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து வருகிறார்.

இதனால் மாவட்ட ஆட்சியர் ஷில்பா மீது பொது மக்களிடையே நல்ல மதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனீயூர் கிராமத்தில் உள்ள  மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்யச் சென்றார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக 115 அடி உயரம் கொண்ட அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது விறுவிறுவென ஏறத் தொடங்கினார். பெண் ஆட்சியர் கடகடவென தொட்டியின் மேல் ஏறியதைப் பார்த்த அவருடன் சென்ற அதிகாரிகள் சற்று பயந்தனர்.

பின்னர் அவர் மேலே ஏறி கிராம மக்களை வைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தார். தொடர்ந்து தொட்டியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுகாதாரமான குடிநீர் வழங்குவதே என் நோக்கம் என தெரிவித்தார்.

இவ்வளவு உயரம் மாவட்ட ஆட்சியர் ஏறியது. அதிகாரிகள் மற்றும் பொது மக்கள்  மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.