Thiruma : ஆம்ஸ்ட்ராங் கொலை - ஆருத்ரா- பா.ஜ.க என முக்கோண தொடர்பு.!! ஸ்டாலினிடம் புகார் தெரிவித்த திருமாவளவன்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக தெரிவித்த திருமாவளவன், தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி தீட்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை மனு கொடுத்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாக சந்தேகம் உள்ளதாக கூறினார். சி பி ஐ விசாரணை வேண்டுமென பாஜகவின் குரலாக உள்ளது. ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் பாஜகவை சார்ந்த சிலருக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக பேசப்பட்டு வருவதை பார்க்கிறோம்.
அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பாஜகவின் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா விவகாரமும் பேசப்படுகிறது என தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை - ஆருத்ரா- பா.ஜ.க என முக்கோண தொடர்பு இருப்பதாக கூறினார். எனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் நபர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வலதுசாரி திட்டம்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திட்டம் தீட்டியவர்கள் பின்னால் இருந்து உதவியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதிப்பட தெரிவித்ததாக கூறினார். சென்னை காவல் ஆணையாளர் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக தெரிவித்தவர், தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி தீட்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் முனைப்பாக உள்ளனர். கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சிப்பது அரசியல் ஆதாயத்தின் உச்சமாக உள்ளது, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை மூடி மறைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.