மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஒரு ரூபாய் எஸ் எம் எஸ் வந்ததா.? வங்கி கணக்கை பரிசோதனை செய்த தமிழக அரசு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வானவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவதற்கு முன்பாக ஒரு ரூபாயை அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தலைவியின் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், மிகையளவு மின்சார பயன்பாடுதான் என்பது தெரிய வந்துள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்.?
ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் விண்ணப்பங்கள் தான் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுள்ளளன. இதைத் தொடர்ந்து, ஆண்டு வருமானம் அதிகமுள்ள விண்ணப்பங்களும் தகுதியிழப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த திட்டமானது வருகிற 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைக்கவுள்ளார். இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு ரூபாய் அனுப்பி சோதனை
சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன், விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்