தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னாச்சு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதி
அதாவது இதய நோய் காரணமாக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் நியமிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சங்கர் ஜிவால் ஓய்வு பெற்று 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தமிழகத்துக்கு நிரந்த டிஜிபியை நியமிக்க தமிழக அரசு காலம்தாழ்த்தி வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததால் தான் தமிழகத்தின் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. ஒரு மாநிலத்தின் டிஜிபி தேர்வு முறையை பொறுத்தவரை மாநில அரசு தகுதிவாயந்த 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கும்.
காலம்தாழ்த்தும் தமிழக அரசு
அதில் 3 பேரை செலக்ட் செய்து மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக தேர்வு செய்யும். இந்த நடைமுறையின்படி தமிழக அரசு சீமா அகர்வால், ஜி.வெங்கட்ராமன், சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்தது. நடைமுறையின்படி மத்திய அரசு 3 பெயர்களை செலக்ட் செய்து அனுப்பி வைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஆதரவானவர்களின் பெயர்கள் இல்லாததால் டிஜிபியை நியமிக்க தமிழக அரசு காலம்தாழ்த்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


