புதிய நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதியா.? விவசாயிகள் கவலை அடைய வேண்டாம்.! அனுமதி கொடுக்க மாட்டோம்- தமிழக அரசு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் அமலில் இருப்பதால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சுரங்கம் தோண்ட முடியாது என தமிழக அரசின் தொழில் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதிதாக 6 நிலக்கரி சுரங்க திட்டம்
காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. என்.எல்.சி நிறுவனத்தின் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளதாகவும், ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
500 இடங்களில் ஆய்வு
இதற்காக 500-க்கும் கூடுதலான இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், இது நிலக்கரி சுரங்கம் ஆரம்ப கட்ட ஆய்வுக்காக விடப்பட்ட அறிவிப்பு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் அங்கு புதிய சுரங்கம் அமைக்க மாநில அரசு அனுமதி தராது. எனவே விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அனுமதி தராது
ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் அமலில் இருப்பதால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சுரங்கம் தோண்ட முடியாது. நாடு முழுவதும் மத்திய அரசின் சுரங்கத் துறை அதிகாரிகள் இதுபோன்று ஆய்வு பணிகளை அவ்வப்போது மேற்கொள்வார்கள். உண்மையிலேயே அங்கு கனிமம் இருந்தால் மாநில அரசின் அனுமதியை பெற்று தான் சுரங்கம் தோண்ட முடியும். நிலத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் லீஸ் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளதாகவும் தமிழக அரசின் தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து..! என்ன காரணம் தெரியுமா.?