காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்கங்கள்.! வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறும்-கதறும் அன்புமணி

தமிழ்நாட்டின் உணவுக் கோப்பையாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக சீரழிப்பதற்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

காவிரி டெல்டா- நிலக்கரி சுரங்கங்கள்

காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின்  கொடுங்கரங்கள் காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. காவிரி படுகையில்  5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர மறுப்பது வருத்தமளிக்கிறது.

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

அமைதிகாக்கும் தமிழக அரசு

நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, புதிய நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம்; அவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்தித் தர மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு கொள்கைப் பிரகடனம் செய்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய அறிவிப்பு  எதையும் தமிழ்நாடு அரசு செய்யாத நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, அருகிலுள்ள காவிரிப் பாசன மாவட்டங்களிலும் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது குறித்த புதிய அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவை குறித்து கருத்து தெரிவிக்காமல் அரசு அமைதி காக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3ஆவது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் 21.07.2022 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட  மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம்  ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன. இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படக் கூடும். 

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4  திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. ஐந்தாவது திட்டமான மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றிற்கு மிக அருகில் அமைகிறது. வடசேரி மின்திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, கீழ்க் குறிச்சி, பரவக்கோட்டை, அண்டமை, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேலி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. மைக்கேல்பட்டி மின்திட்டம் அரியலூர் மாவட்டம் அழிசுக்குடி, பருக்கல் உள்ளிட்ட 4 கிராமங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது. புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது. மாறாக, பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்கள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் சீரழிவுப் பகுதியாக மாறிவிடக்கூடும்.

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

ஆழ்துளை கிணறு மூலம் சோதனை

சேத்தியாத்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருப்பதை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார்.  இவற்றுக்கான ஏலத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால், இந்த நிலக்கரி திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறி முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது. சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் கூடுதலான இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி  நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் அனுமதியும், ஆதரவும் இல்லாமல் இவற்றை செய்திருக்க முடியாது. 

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

இவ்வளவுக்கு பிறகும் இந்தத் திட்டங்கள் பற்றி தங்கள் கவனத்திற்கு வரவில்லை; இப்படிப்பட்ட திட்டங்களே இல்லை என்றெல்லாம் தமிழக அரசு கூறி வருவதை  ஏற்றுக்கொள்ள முடியாது. இது காவிரி பாசன மாவட்ட மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலாகும். புதிய நிலக்கரி திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தி விடும் என்பது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டங்களுக்கான தேவை எதுவுமே தமிழ்நாட்டிற்கு இல்லை என்பது தான் உண்மையாகும். இன்றைய நிலையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட் ஆகும். அதில்  800 முதல் 1000 மெகாவாட் மட்டுமே என்.எல்.சி மூலம் கிடைக்கிறது. அதுவும் கூட சுற்றுச்சூழலைச் சீரழித்து பெறப்படும் மின்சாரம் ஆகும். இது எந்த வகையிலும் தமிழ்நாட்டின் மின்சூழலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

Anbumani condemns the plan to build 6 coal mines to destroy the Cauvery Delta region

சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி அளிக்கனும்

தமிழ்நாட்டின் உணவுக் கோப்பையாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக சீரழிப்பதற்கு ஆதரவாக இருக்கக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5  புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளிக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர் ஹரிபத்மன் சஸ்பெண்ட், 3 பேர் டிஸ்மிஸ்-கலாஷேத்திரா கல்லூரி அறிவிப்பு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios