மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர் ஹரிபத்மன் சஸ்பெண்ட், 3 பேர் டிஸ்மிஸ்-கலாஷேத்திரா கல்லூரி அறிவிப்பு
பாலியல் துன்புறத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் டிஜிபி லத்திகா சரண், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் அடங்கிய குழுவை அமைத்துள்ளது கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட நான்கு பேரின் நீக்கம் குறித்த அறிவிப்பை மாணவர்களின் வலியுறுத்தலை அடுத்து எழுத்துப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்திரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகள் வலியுறுத்தியிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பேராசிரியர் ஹரிபத்மன் கல்லூரியில் படித்த போதும், படிப்பு முடித்த பிறகும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார்.
உல்லாசத்திற்கு அழைத்த பேராசிரியர்
மேலும் கல்லூரியில் படிக்கும் போது பேச்சுவாக்கில் படக்கூடாத, தொடக்கூடாத இடத்தில் தொட்டு பேசுவார். என்னை விரும்புவதாக சொல்லி, உல்லாசத்துக்கு என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். நான் போக மறுத்ததால் அவரது வகுப்பில் பல வகையிலும் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த புகாரையடுத்து தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஹரி பத்மனை வட சென்னை பகுதியில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து ஹரி பத்மனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கலாஷேத்திரா தேர்வுகள் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்போம் என எழுத்து பூர்வமாக அறிக்கை கொடுத்தால் மட்டுமே பங்கேற்போம் என மாணவிகள் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து கலாஷேத்திரா கல்லூரி அறக்கட்டளை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
ஹரிபத்மன் இடை நீக்கம்
பாலியல் துன்புறத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் டிஜிபி லத்திகா சரண், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் அடங்கிய குழுவை அமைத்து கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. பேராசிரியர் ஹரிபத்மன் உடனடியாக இடை நீக்கம் செய்யப்படுவதாகவும், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஶ்ரீநாத் ஆகியோர் நீக்கப்படுவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ளம்படி அழைப்பு விடுத்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதி பூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.