Ration Shop : ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பு நிறுத்தமா.? அதிரடியாக புதிய முடிவு எடுத்த தமிழக அரசு
பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எந்தவித தடையும் ஏற்படாமல் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிடும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது.
குறைந்த விலையில் உணவு பொருட்கள்
தமிழகத்தில் சுமார் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில்1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு,சக்கரை பாமாயில் எண்ணெய் ஆகியவை குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு தமிழக அரசு விநியோகம் செய்கிறது.
இதன் காரணமாக ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த 2007-ஆம் ஆண்டில் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட போது, அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், பருப்பு, பாமாயில், மளிகை சாமான்கள் வழங்கும் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
பாமாயில், துவரம் பருப்பு நிறுத்தம்.?
இந்தநிலையில் தற்போது பாமாயில், துவரம்பருப்பு வழங்கும் திட்டத்திற்கான மானியச் செலவு அதிகரித்து விட்டதால், அத்திட்டத்தை கைவிடும்படி நிதித்துறை கேட்டுக் கொண்டதாகவும்,இதனை தொடர்ந்து பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தவும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அடுத்த இரண்டு மாதத்திற்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது.
டெண்டர் கோரிய தமிழக அரசு
பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் வகையில், விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே பாமாயில் மற்றும் துவரம் பருப்பு நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 27 ஆம் தேதி என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.