தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! எந்த எந்த மாவட்டங்கள்- வானிலை மையம் அலர்ட்
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. குன்னூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கோவை, சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீரானது தேங்கியது. தாழ்வான பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மரமானது சாலையில் சென்ற அரசு பேருந்து மீது விழுந்துள்ளது.
இன்றும், நாளையும் மழை எச்சரிக்கை
மழையை பொறுத்தவரை இன்றைய தினத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தினத்தில் (24.11.2023) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
22.11.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்க கடல் பகுதிகள்:
22.11.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்