Schools Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. இந்த 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன?
தொடர் கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியகுமாரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.