அதிமுக பொதுக்குழு செல்லுமா.? செல்லாதா.? நீதிமன்றத்தில் காரசார விவாதம்..! தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி
அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சட்டப்படி தான் பொதுக்குழு நடைபெற்றது
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பி எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதாகவும், அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதால், அதை நோட்டீசாக கருத வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ், ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட விஜய் நாராயண், பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது எனவும் விளக்கம் அளித்தார்.
இருவரின் பதிவியும் காலாவதியாகிவிட்டது
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டிலேயே எப்படி பதவிகள் காலாவதி ஆனது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், 2021 டிசம்பர் 1 செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே முடிவாகும் என்றார். தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன என்றும், இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்து உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் மட்டுமே விதிகள் திருத்தப்பட்டதாகவும், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒற்றை தலைமையை விரும்பும் உறுப்பினர்கள்
ஜுன் 23 பொதுக்குழுவிலேயே, ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டதால், முன்கூட்டி நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூற முடியாது என்றும், கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் நோட்டீஸ் என விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் 2432 பேர் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின், கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறி விஜய் நாராயண் தன் வாதங்களை நிறைவு செய்தார். அதன்பின்னர் ஈ.பி.எஸ். தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, எதிர்மனுதாரராகளில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுவிட்டு, மனுதாரராக பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே பன்னீர்செல்வத்துக்கு தெரிந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும், ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவு முக்கியம்
கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும் என்றும் குறிப்பிட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களின் தேர்தல் செல்லும் என்றும், அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். என்பதால், அவர்கள் எடுக்கும் முடிவு என்பது ஒட்டுமொத்த உறுப்பினர்களின் முடிவாக தான் பார்க்க வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை பெரும்பான்மையையே பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் ஃபார்முலாவை பாலோ பண்ணும் கெஜ்ரிவால்...! உற்சாகத்தில் திமுகவினர்
ஓபிஎஸ் தரப்பு வாதம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார். எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும், 2017ல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யத்தான் என்றும், ஆனால் இப்போது இருக்கும் சூழலே வேறு என்றும் சுட்டிக்காட்டினார். பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது என்றும், முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு
அப்போது நீதிபதி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா என கேள்வி எழுப்பியபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கட்சி நலனுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் மனுதாரராக இருந்தாலும், ஒருங்கிணைப்பார் பதவியின் அடிப்படையில் எதிர்மனுதாரர்களில் ஒருவராக குறிப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டது. இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்ற விதி இருந்ததாகவும், ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியில் தற்போது திருத்தம் செய்துள்ளதாகவும் கூறினார்.வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஊடகங்கள் பிளாஷ் செய்வதை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படிதான் ஜூன் 23 பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்