தமிழ்நாட்டில் உழவர்களிடமிருந்து மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் கேட்டுக்கொண்டார்.
Mango production in Tamil Nadu : தமிழகத்தில் தற்போது மாம்பழ விளைச்சல், குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் காரணமாக உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஒரு கிலோ மாம்பழம் 1-4 ரூபாய்க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஒரு குவிண்டால் மாம்பழத்தின் விலை ரூ.12,000-லிருந்து ரூ.3,000-ஆக குறைந்துள்ளது
தமிழகத்தில் அதிகரித்த மாம்பழ உற்பத்தி
தமிழ்நாட்டில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர். தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பெங்களூரா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரா, அல்போன்சா, ருமானி போன்ற இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மா இரகங்களைப் பொறுத்தவரை, இயற்கையாகவே ஒரு ஆண்டில் அதிக மகசூலும் அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு குறைவான மகசூலும் தரும் தன்மை கொண்டது. இந்த சுழற்சி பெரும்பாலும் அனைத்து மா இரகங்களிலும் காணப்படுகிறது.
நடப்பாண்டில், பருவநிலை மா உற்பத்திக்கு உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான எக்டருக்கு 5 முதல் 6 மெட்ரிக் டன் என்பது எட்டு மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி அதிகரிப்பினால் மாம்பழக்கூழ் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதலுக்கு உகந்த பெங்களூரா இரகம், பதப்படுத்தப்படும் நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயித்த பின்னரும் மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மாம்பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு
இதனைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத்துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மா பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் சென்ற ஆண்டின் மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், பதப்படுத்தும் நிறுவனங்களின் தேவை குறைந்துள்ளதாகவும். LDIT உற்பத்தி அதிகம் இருப்பதால், விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 20க்கு மேல் மா வில் இனிப்புத்தன்மை (TSS) 20° பிரிக்ஸ் என்ற அளவில் இருக்கும் என்பதால் அப்பொழுது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாகவும்,பதப்படுத்தும் நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது.
மா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும். மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா இரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவர்களிடமிருந்து மா பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் கேட்டுக்கொண்டார்.
மாம்பழ விவசாயிகளின் கோரிக்கை என்ன.?
அதற்கு, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆவன செய்வதாகத் தெரிவித்து மாம்பழக்கூழ் உற்பத்தியினை தற்போது ஆரம்பித்து உள்ளனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரு கிலோ மாம்பழத்திற்கு குறைந்தபட்சம் 13 ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
