கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு உடற்கூராய்வு.!உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா.?உச்சநீதிமன்றம் கேள்வி
கள்ளக்குறிச்சியில் மர்ம மரணமடைந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவர் குழு கொண்டு மறுஉடற்கூறாய்வு செய்யக்கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி ஸ்ரீமதி என்னும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஏற்கனவே உடற்கூராய்வு நடத்தப்பட்ட நிலையில் அதில் ஸ்ரீமதி உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மறு உடற்கூறாய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருச்சி மருத்துவர் ஜூலியான ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், விழுப்புரம். மருத்துவர் கீதாஞ்சலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தடையவியல் நிபுணர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் மீண்டும் ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதில் தங்கள் தரப்பு தெரிவிக்கும் மருத்துவக் குழுக்களே ஸ்ரீமதியின் உடலை மீண்டும் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. மாணவியின் தந்தை கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தங்கள் தரப்பு தெரிவிக்கும் மருத்துவக் குழுக்களே ஸ்ரீமதியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையில் நடைபெற இருக்கக்கூடிய மறு உடற்கூறாய்விற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை உடனடியாக விரைந்து விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வு முன்பு மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இவ்வழக்கு நாளைய தினம் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
நீதிபதி கண்டிப்பு
அதனைதொடர்ந்து மாணவியின் தந்தை தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்றைய தினம் நடைபெறும் மறுஉடற்கூறாய்வை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரினார். அதற்கு தலைமை நீதிபதி உயர்நீதிமற்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவால் நடைபெறவுள்ள மறு பிரேத பரிசோதனைக்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் விசாரித்து அமைத்த மருத்துவர் குழுவை குறை கூற வேண்டாம் எனவும் தலைமை நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.மேலும் உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்