Asianet News TamilAsianet News Tamil

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்

Thangam thennarasu explains about tnpsc group 2 exam results smp
Author
First Published Nov 7, 2023, 11:26 AM IST | Last Updated Nov 7, 2023, 11:26 AM IST

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, சுமார் 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் 2A தவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிடக் காலதாமதம் ஆவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும்  25.2.2023 அன்று  தேர்வு நடைபெற்றது.  கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர்.

இது ஒன்றிய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும் முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும். இத்தேர்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் ஐந்து மாதங்களாகும். எனவே ஒன்றிய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது.  வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாட்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்ததால் இப்பணிகள் ஆரம்பிக்க சற்றே தாமதமானது.

பாரத் கோதுமை மாவு விற்பனையை தொடங்கிய மத்திய அரசு: கிலோ எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற தாமதம் தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் வரக்கூடாது என்பதற்காக முதலமைச்சர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கணிப்பொறி மதிப்பீட்டு ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக செவ்வனே நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி  நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முதலமைச்சரால் தொகுதி 4 பணியில் தேர்வு பெற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.  2023-24ஆம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios