தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை  பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மஹி ஆகிய பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், இந்திய வானிலை மையமும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து  கனமழை பெய்தது. வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. 

புறநகரிலும் பெய்த தொடர் மழையால், தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. அதிகபட்சமாக தாம்பரத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

இதே போல் கடலூரில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.