தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நியமனங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நியமனங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMC) மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்கான சில நிபந்தனைகளையும் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
நியமனத்துக்கான முக்கிய நிபந்தனைகள்:
மகப்பேறு விடுப்பு, நீண்ட நாள் விடுப்பு, அல்லது மாற்றுப் பணியில் சென்றுள்ள ஆசிரியர்களின் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, பி.எட். தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட். தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம். இந்த நியமனங்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவையாக இருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்:
பணி நியமனத்தில் எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தலைமை ஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம், புதிய கல்வி ஆண்டு தொடங்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
