பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்களும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக தூய்மைப் படுத்தும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, இதற்கு கடும் தூய்மைப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிரந்தர பணி, நிரந்தர வருமானம், தங்களை அரசு ஊழியராக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 150 நாட்களைக் கடந்தும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்தப்போவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அறிவாலயத்தில் காலை முதலே காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தூய்மைப் பணியாளர்கள் குழு, குழுவாக அறிவாலயம் நோக்கி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல் துறையினர் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மறுபுறம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும் தலைநகர் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர்களின் இந்த கோரிக்கை கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நிலையில் அதனை நிறைவேற்றக் கோரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இன்றைய தினம் சென்னை எழும்பூர் அருகே அமைந்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆசிரியர்களின் கோரிக்கை கவனம் ஈர்த்துள்ளது.