திமுக ஆட்சி முடியும்போது ஐந்தரை லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். நம் அத்தனை பேரையும் ஸ்டாலின் கடனாளியாக்கி விட்டார். நம்மை கடனாளியாக்கி சாதனை படைத்துள்ளது ஸ்டாலின் அரசு.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் மின் கட்டணம் உயர்ந்து விட்டது. திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, தண்னீர் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு என அனைத்தும் உயர்ந்துள்ளது.

கடனாளியாக்கிய ஸ்டாலின்

திமுக ஆட்சி முடியும்போது ஐந்தரை லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். நம் அத்தனை பேரையும் ஸ்டாலின் கடனாளியாக்கி விட்டார். நம்மை கடனாளியாக்கி சாதனை படைத்துள்ளது ஸ்டாலின் அரசு. இந்த ஆட்சியில் புதிய திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் 21 மாவட்டங்களில் புதிய அரசுக்கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்துள்ளோம்.

தாலிக்கு தங்கம் திட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். மணமகனுக்கு பட்டு வேஷ்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். அம்மா கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

210 அரசு பள்ளிகள் மூடல்

அதிமுக ஆட்சியில் ஏராளமானோர் கல்வி பெற்றனர். ஆனால் திமுக ஆட்சியில் 210 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி நிர்வாகத்தை குறை கூறுகிறார் ஸ்டாலின். உள்ளாட்சியில் 140 விருதுகளை நாங்கள் ஆட்சி செய்தபோது பெற்றுள்ளோம். ஆனால் திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், இப்போது உதயநிதி, அடுத்து இன்பநிதி என வாரிசு அரசியல் நடக்கிறது. இந்த வாரிசு அரசியல் தமிழக மக்களுக்கு தேவையா?'' என்று தெரிவித்துள்ளார்.