இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 5 அன்று குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார்.

நாடு முழுவதும் 45 சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் இடம் பெற்றுள்ளனர்.

45 ஆசிரியர்களுக்கு விருது

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, கல்வித் துறையில் சிறப்பான சேவைகளை ஆற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான 45 ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த நல்லாசிரியர்கள்

இதில், தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன் ஆகியோர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.