Tamilisai : தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி குறைவாக கொடுத்தது ஏன்.? தமிழிசை அதிரடி விளக்கம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்ததில் காங்கிரசை விட ஸ்டாலின் அதிக உரிமை கொண்டாடுகிறார் என தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் தமிழிசை பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தெலங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதியில் தமிழிசை களம் இறங்கினார். இந்தநிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய தமிழிசை சவுந்திரராஜன் ரயில் மூலம் ஐதராபாத் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா மக்கள் மீது நான் பெரும் நம்பிக்கை வைத்துள்ளேன் அவர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் தெலுங்கானாவில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு
மத்திய அரசின் திட்டங்கள்
அப்போது மத்திய அரசு தமிழகத்திற்கு குறைவான வெள்ள நிவாரண நிதி வழங்கியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்திற்கு நிதியும் உள்ளது நீதியும் உள்ளது. வி பி சி முதல் மன்மோகன் சிங் வரை அவர்கள் ஆண்ட போது கொண்டு வந்த திட்டங்களை விட பல திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். சென்னை விமான நிலைய வரிவாக்கம், மதுரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வி மருத்துவமனைகள் மதுரை, திருச்சி திருநெல்வேலியில் 300 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு மருத்துவ உதவி செல்லும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி இருப்பதை விட அதிகமாக திட்டங்களை மோடி வழங்கியுள்ளார் என்பது உண்மை.
வெள்ள நிவாரண நிதிக்கு கணக்கீடு
நிதியை பொறுத்தமட்டில் வறட்சி நிவாரணமாக இருந்தாலும் வெள்ள நிவாரணமாக இருந்தாலும் கொடுப்பதற்கு கணக்கீடு உள்ளது, அதன்படி வெள்ளத்திற்கு நிவாரணம் எவ்வளவு கொடுக்க வேண்டும், பேரிடருக்கு எவ்வளவு நிவாரணம் கொடுக்க வேண்டும் என கணக்கீடு உள்ளது. அதனால் நீதியும் கிடைத்துள்ளது. நிதியும் கிடைத்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்ததில் காங்கிரசை விட ஸ்டாலின் அதிக உரிமை கொண்டாடுகிறார். இதற்கு முன்னால் தமிழகத்திற்கு என்ன திட்டத்தை வளர்ச்சியை கொண்டு வந்தீர்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது தமிழகத்தை முற்றிலுமாக மறந்தனர். சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி தரப்பு, பாஜக திறப்பு என இரு தரப்பிலும் தான் கேள்வி எழுப்பி உள்ளது எப்படி ஒரு தலை பட்சமாக இருக்கும் என தமிழிசை கேள்வி எழுப்பினார்.