மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு
மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக சார்பில் வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீதி கட்சியை தொடங்கிய சர் .பிட்டி. தியாகராயரின் 173வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமுதாயத்தில் மிக மிக பிந்தங்கியவர்கள் வாழ்வியல் மேம்பாடு அடைய வேண்டும் என்று சமூகம் கல்வி பொருளாதாரம் ஆகிய மூன்று பகுதிகளில் மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தொடங்கப்பட்டது நீதி கட்சி.
1921 ஆம் ஆண்டு முதல் அரசாணை வெளியிடப்பட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு வரவேண்டும் எனும் வகையில் குரல் கொடுத்தது நீதி கட்சி தான். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, அந்த 500 கோடி ரூபாய் பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாகும். இந்த சாலைகள் உரிய தரத்தில் போடப்படுவதில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சாலைகள் அமைப்பதற்கு முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பேராசிரியரிடம் ஒரு சான்றிதழ் பெற்றுக் கொண்டு 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சாலைகள் உரிய ஆய்வுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டனவா, யாரிடம் சான்றிதழ் பெற்று அமைக்கப்பட்டது. எத்தனை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் சாலைகளை அமைப்பதற்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.
தற்போது நடப்பது ஒரு இடியமின் சர்வாதிகார ஆட்சி. அதிமுக கட்சித் தொண்டர்கள் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கருத்து கூறினால் இரவோடு இரவாக அவர்களை கைது செய்து விடுவார்கள். கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் இல்லை என்பது மிக கண்டிக்கத்தக்கது. இது குறித்து உண்மையை விளக்க வேண்டியது காவல்துறையின் கடமை. காவல்துறையினர் எஜமானராக இருக்கும் ஸ்டாலின் கூறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
2015ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்த நிதி ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் கோடி. ஆனால் இதுவரை 7 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கி உள்ளது. மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்ளாமல் வடமாநிலங்களில் ஏதேனும் இயற்கை பேரிடர் நடந்தால் அவர்களுக்கு வாரி வழங்குகின்றனர். தமிழக மக்களிடம் பெரும் வரி பணம் தமிழக மக்களுக்கு சரிசமமாக வகுத்துக் கொடுங்கள். ஆனால் வடக்கில் ஒரு நீதி, தெற்கில் ஓர் நீதி என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
உரிய அரசியலமைப்பு சட்டத்தினை அமல்படுத்தியிருந்தால் மாநிலங்களில் கொடுக்கப்பட்ட வரிப்பணத்திற்கு ஏதுவாக மக்களுக்கு மீண்டும் திரும்பி வந்து இருக்கும். அதை செய்யாமல் மாநில உரிமையை காப்போம் என ஸ்டாலின் சொல்வது கேலி கூத்தாக உள்ளது. திமுக அரசு தங்களின் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட செயல்களை தவிர்த்து வேறு எந்த செயல்களும் செய்யவில்லை. தமிழக உரிமையை காக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.