Tamil Nadu Weatherman : மழை இன்னும் முடியல.. இன்று முழுவதும் வெளுத்து வாங்க இருக்கு- அலர்ட் கொடுத்த வெதர்மேன்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை புரட்டி போட்டு வரும் நிலையில், மழை இன்னும் முடிவடையவில்லையெனவும், இன்று முழுவதும் பெய்ய இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
விடாமல் அடிக்கும் மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. தாமிரபரணி, மணிமுத்தாறு, காரையாறு உள்ளிட்ட அனைத்து நீர் பிடிப்பு பகுதிகளும் நிரம்பி வழிகிறது. இதனால் அதிகப்படியான நீரானது திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டனவாளங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நிலைகுழைந்து போயுள்ளது.
காயல்பட்டிணத்தில் வரலாறு காணாத மழை பதிவு
இந்தநிலையில் அடுத்த கட்டமாக மதுரை, தேனி, விருதுநகருக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே ஆண்டில் பெய்யக்கூடிய மழை அளவை விட 95 செ.மீட்டர் ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றும் மழை தொடரும்
மேலும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழுவதும் கனமழை பெய்யும் எனவும் மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறியுள்ளார். மழையானது நேற்று போல் கன மழையாக இருக்காது ஆனால் இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்