வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நெல்லை,தூத்துக்குடி.! தாமிரபரணியில் கடும் வெள்ளம்- மீட்பு பணி தீவிரம்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழையானது பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
வெளுத்து வாங்கும் கன மழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன் படி நெல்லை, உள்ளிட்ட 4 மாவட்டங்களை மழையானது வெளுத்து வாங்கியது. நேற்று முன் தினம் பெய்ய தொடங்கிய மழை இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
காயல்பட்டினத்தில் வரலாறு காணாத மழை
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84 புள்ளி 5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. திருச்செந்தூர் - 66.9 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் - 60.7 செ.மீ., சாத்தான்குளம் - 44.7 செ.மீ., கோவில்பட்டி - 37.5 செ.மீ. மழை பதிவுயாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பாய்ந்தோடுவதால் மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆ்ற்றில் கடும் வெள்ளப்பெருக்கு
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 20 அடி உயர்ந்து 104 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27,848 கனஅடி, 8000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி, வைராவிகுளம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, ஆரடியூர், கீழ்முகம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையார், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
கனமழை எதிரொலி : 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. என்னென்ன மாவட்டங்கள் தெரியுமா?