ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பெலகொண்டபள்ளியில் இரண்டு இடங்கள் பரிசீலனையில் உள்ளன. ஓ.எஸ்.எல். ஆய்வுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான நிலையத்துக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பெலகொண்டபள்ளியில் தனேஜா ஏவியேஷன் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இரண்டு இடங்கள் இறுதிக்கட்டப் பரிசீலனையில் உள்ளன. இந்த இடங்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால், பசுமைவெளி விமான நிலையமாக உருவாக்க பொருத்தமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், ஓ.எஸ்.எல் (OSL) எனப்படும் விமானப் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான உயரம் உள்ள இடத்தைக் (Obstacle Limitation Surfaces) கண்டுபிடிக்கும் ஆய்வைச் மேற்கொள்ள தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்துசேரும் ஒப்பந்தப் புள்ளிகள் அடிப்படையில் தகுதியான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். அந்த நிறுவனம் ஓ.எஸ்.எல். தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும். பரிசீலனையில் உள்ள இரண்டு இடங்களில் வான்வெளி மத்திய பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒப்பந்தப் புள்ளிகள் கிடைத்ததும், சில வாரங்களில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. பின்னர், ஓ.எஸ்.எல் ஆய்வுப் பணிகள் வேகமாக முடுக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான ஓடுபாதை அமையும் இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவு வரை உள்ள பகுதிகளில் ஓ.எஸ்.எல். ஆய்வுகள் நடக்கும்.
20 கி.மீ. வரம்புக்குள் தரைமட்டம் எந்த நிலையில் இருக்கிறது? விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏற்ற உயரம் இருக்கிறதா என்று பார்க்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பின்னர், ஓ.எஸ்.எல். ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதனப்டி, ஓசூர் விமான நிலையம் அமையப்போகும் இடம் எது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.


