திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் 408.36 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். 

முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும். திருச்சி பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் 2021ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 162 .18 கோடியில் பன்நோக்கு வணிக வளாகம் மற்றும் 246.18 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என மொத்தம் 408.36 கோடி மதிப்பில் சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு மிக்க பேருந்து முனையமாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விமான நிலையத்திற்கு இணையான வசதி

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரைத்தளத்தில் 124 பேருந்துகள், நீண்ட நேர நிறுத்த பேருந்துகள் 141, குறைந்த நேர நிறுத்த பேருந்துகள் 80 என 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளூர் நகரப் பேருந்துகளும், என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இயங்கும் படிக்கட்டுகள்

மேலும், 78 கடைகள் மற்றும் 4 உணவகங்கள், 6 மின்தூக்கிகள், 6 இயங்கும் படிக்கட்டுகள் (Escalators), 49 எல்.இ.டி. அறிவிப்புப் பலகைகள், 11 நபர்கள் அமர்ந்து செல்லும் பேட்டரி கார்கள், 166 கண்காணிப்பு கேமராக்கள், ஏடிஎம் மையங்கள், பயணச்சீட்டு முன்பதிவு மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணியர் ஓய்வறை, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, நேரப் காப்பாளர் அறை, 50 மீட்டருக்கு ஒன்று வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்புகள், ஜெனரேட்டர் வசதி, புத்தகக் கடைகள் மற்றும் இலவச செல்போன் சார்ஜர் மையங்கள், 135 சிறுநீர் கழிப்பிடம், 104 கழிப்பிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் 4, குளியலறை 4 என 284 ஒப்பனை அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஒப்பனை அறைகள், 100 ஆட்டோக்கள் நிறுத்துமிடம், 1923 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 212 கார்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஓய்வெடுப்பதற்காக தரைத்தளம் 

இப்பேருந்து முனையத்தில், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 208 படுக்கை வசதி மற்றும் அனைத்து வசதிகளுடன் ஒரு தனி தங்கும் விடுதியும், வாகனங்கள் நிறுத்துமிட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக பேருந்து முனையத்தின் தரைதளம் முற்றிலும் குளிரூட்டும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசினை கட்டுப்படுத்தி குளிர்ந்த சூழலை ஏற்படுத்தும் வகையில், பேருந்து முனையத்தைச் சுற்றிலும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கும் சமூக நீதிக்கும் அரும்பாடுபட்ட முப்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பெயரால் அமைந்திடும் காய்கறி அங்காடி, கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவை மக்களின் முன்னேற்றத்திற்கும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் வித்திடும் பெரும் திட்டங்களாகும்.

102 புதிய பேருந்துகள்

இதன் தொடர்ச்சியாக, இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து
முனையத்தை பார்வையிட்டு, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 புதிய பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 8 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும் என மொத்தம் 120 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த 120 புதிய பேருந்துகளில், மகளிரின் சிறப்பான வரவேற்பினை பெற்ற “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக” 38 நகரப் பேருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.