தமிழ்நாட்டின் ஏற்காடு மற்றும் ஏலகிரி மலைப்பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த ரோப் வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடப்பட்டு, சாத்தியக்கூறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Ropeway project in Yercaud and Yelagiri : தமிழ்நாட்டில் தெய்வீக தலங்கள், பசுமைமிக்க மலை தொடர்கள், தொன்மையான கோயில்கள், கலை, கட்டிடக்கலை மற்றும் இயற்கை அழகு நிறைந்த பல சுற்றுலா தளங்கள் உள்ளன. தமிழ்நாடு வரலாற்று மரபிலும், கலாசார சிறப்பிலும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு மனதிற்கினிய இடமாக உள்ளது. அந்த வகையில் பசுமை சுற்றுலா, சுகாதார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, பாரம்பரிய ஊர்த் சுற்றுலா, கடற்கரை மற்றும் அட்வெஞ்சர் சுற்றுலா போன்றவற்றை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. இதில் இயற்கையான மலைப்பகுதிக்கு செல்ல மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் நீலகிரி மலைத்தொடரின் முத்தான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குளிர்ந்த வானிலையும், தேயிலை தோட்டங்களும், பூங்காக்களும் காரணமாக "தென்னிந்தியாவின் ராணி" என ஊட்டி அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சுற்றுலா திட்டங்கள்

அடுத்ததாக கோயம்புத்தூர் அருகிலுள்ள வால்பாறை அழகான நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்களால் சுற்றுலாக் பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது. இங்குள்ள ஆழியாறு அணையை பார்க்கவே கண்களுக்கு விருந்தாக இருக்கும். அடுத்தாக மலைகளில் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், பில்லர் பாறைகள், குணா குகை, பைன் காடு பை மற்றும் பிரையன்ட் பூங்காவிற்கு புகழ்பெற்றது. இது போன்ற பல மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல திட்டங்களை சுற்றுலா துறை வகுத்து வருகிறது. அந்த வகையில் ரோப் வே திட்டம் செயல்படுத்தவும் ஆலோசித்தது. ஆனால் பல மலை தொடர்களாக இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது.

ஏற்காடு, ஏலகிரி ரோப் வே திட்டம்

இந்த நிலையில் சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மற்றும் ஏலகிரியில் ரோப் வே அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே திருச்சியில் உள்ள மலைக்கோட்டைக்கு ரோப்வே வசதி ஏற்படுத்துவது அப்பகுதி மக்களின் பல் ஆண்டு கால கனவாகும். 1977ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரோப் வே திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து 1998இல் ரூ.3 கோடி மதிப்பில் மீண்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்காடு மற்றும் ஏலகிரி மலைப் பகுதிகளில் ரோப்வே அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க டெண்டர் அறிவித்துள்ளது. இதற்காக சாத்தியக்கூறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதையும், பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்ட அறிக்கை தயாரிக்கும் சுற்றுலா துறை 

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. எவ்வளவு தூரத்திற்கு ரோப் வே அமைக்க சாத்தியக் கூறு உள்ளது, எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு அமைக்கலாம் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

 டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட உடன் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காடு (சேலம் மாவட்டம்) மற்றும் ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய மலைவாழ் சுற்றுலாத் தலங்களில் ரோப் கார் வசதி அமைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை எழிலை ரசிக்கவும், புதிய பயண அனுபவத்தைப் பெற வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.