கரூர் பிரச்சாரம் தொடர்பான நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஐ.டி விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் ரோடு ஷோ வழிகாட்டுதல்களுக்கான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கானது எப்படி?
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் தவெக சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 4 பேர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.இதுதொடர்பான மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆஜராகினர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகி தனது வாதங்களை முன் வைத்தனர்.
அதாவது தவெக தரப்பில் எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடைபெற்றதும் விஜய் தப்பித்து ஓடியதாக அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது. போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல் அடிப்படையில் தான் விஜய் அங்கிருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தவெக நிர்வாகிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும். எஸ்.ஐ.டி விசாரணை வேண்டாம். முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது ஏன்? ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்? என கேள்வி எழுப்பினார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என கருத்து தெரிவித்தனர். கரூர் பிரச்சாரம் தொடர்பான நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஐ.டி விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் ரோடு ஷோ வழிகாட்டுதல்களுக்கான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கானது எப்படி? தேர்தல் பிரச்சார நெறிமுறை தொடர்பான வழக்கின் போது விஜய் பற்றிய கருத்துகளை உயர்நீதிமன்றம் முன்வைத்தது ஏன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை. அஸ்ரா கார்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார். சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை முறையாக நடைபெறுகிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். விசாரணைக் குழுவின் அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டனர், அரசால் அல்ல என்றார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து எப்படி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
