ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் OTP சரிபார்ப்பு முறை தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு பிரச்சினைகளை எழுப்பியதால் சென்னை உயர் நீதிமன்றம் தடையை விதித்தது. திமுகவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
DMK membership Supreme Court : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் "ஓரணியில் தமிழ்நாடு" திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தினை தொடங்கியுள்ளது. ஜூலை 1 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் திமுக இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் திமுகவில் இணைத்து வருகிறார்கள். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இறுதியாக ஓரணியில் தமிழ்நாடு முகாமில் இணைய ஓடிபி கேட்கப்படுகிறது.
ஓரணியில் தமிழ்நாடு- திமுகவிற்கு பின்னடைவு
இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உறுப்பினர் சேர்க்கைக்காக பொதுமக்களிடம் ஓ.டி.பி. பெற இடைக்கால தடை விதித்து கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கைக்கு மக்களிடம் ஒ.டி.பி. பெற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்த இடைக்கால தடை நீக்க கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது திமுகவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுகவின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்ததுடன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாட அறிவுறுத்தி மனுவை முடித்து வைத்தனர்.
