சென்னையில் கனமழை.. 14 சுரங்கபாதைகள் மூடல்.. மின்சார ரயில் சேவையில் சிக்கல்? சுகாதார அதிகாரி விடுத்த கோரிக்கை!
Chennai Rain Live Updates : சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே சில போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக பெருங்குடி முதல் அப்பல்லோ மருத்துவமனைகள் வரும் திசை, அதே போல குருநானக் கல்லூரியிலிருந்து ஐந்து ஃபர்லாங் சாலை உள்வரும் திசை, மேலும் காந்தி சிலை முதல் சாந்தோம் வரை இரு திசைகளும் மூடப்பட்டன. அதே போல திருமங்கலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எஸ்டேட் ரோட்டில் இருந்து பார்க் ரோடுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அருகே, சாஸ்திரி பவன்- ஹாடோஸ் சாலை, ஆயிரம் விளக்கு - காதர் நவாஸ்கான் சாலை, கிரீம்ஸ் சாலை, லயோலா கல்லூரி- லிபா கேட், எழும்பூர் போலீஸ் மருத்துவமனை அருகில், தி.நகர் - கமலாலயம் அருகில், கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலை, ஆகிய இடங்களில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன இதனால் அங்கு கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மழை நீர் குளமென தேங்கி நிற்பதால் சென்னை முழுவதும் சுமார் 14 சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன குறிப்பாக சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை, சி.பி. சாலை சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, செம்பியம் (பெரம்பூர்) சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் RBI சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மிக்ஜாம்” புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்காள விரிகுடாவில் அதிகாலை 2.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது. சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ., நெல்லூருக்கு தென்கிழக்கே 220 கி.மீ., பாபட்லாவிலிருந்து 330 கி.மீ. தென்-தென்கிழக்கே, மச்சிலிப்பட்டினத்திலிருந்து 350 கி.மீ. தென்-தென்கிழக்கே இது நிலைகொண்டுள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் இணையத் தடைகள் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல இடங்களில் மின்வெட்டு.. எதிர்பார்த்ததைவிட அதிக மழை.. ஆடிப்போன வளசரவாக்கம் - ரெயின் அப்டேட்ஸ்!
மேலும் ரயில் வழித்தடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் சென்னை மின்சார ரயில் சேவையும் இன்று காலை 8 மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குடிதண்ணீரை நன்கு காய்ச்சி மட்டுமே குடிக்குமாறு, தேவையற்ற உடல் உபாதைகளை தடுக்க அது உதவும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.