Vijay political entry : நெல்லையில் நடந்த அரசு விளையாட்டு விழா ஒன்றில், மாணவிகள் TVK  கட்சிக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டது சர்ச்சையை ஏற்படுத்தி, அவரது அரசியல் தாக்கத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

Vijay's youth support in politics : தமிழக அரசியலில் ஒரு புதிய அலையாக நடிகர் விஜய் உள்ளார், தமிழக வெற்றிக்கழக என்ற கட்சியை 2024 பிப்ரவரியில் தொடங்கியதிலிருந்து, குறிப்பாக 18-35 வயது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே அவருக்கு பெரும் ஆதரவு உள்ளது. இது தமிழக 2026 சட்டமன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜயின் ரசிகர் அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் முதலில் சமூக சேவைச் செயற்பாடுகளை மேற்கொண்டு, இப்போது அரசியல் அங்கீகாரத்துடன் இணைந்துள்ளது. திமுக, அதிமுக போன்ற பழைய கட்சிகளுக்கு மாற்றாக விஜய் திகழ்வார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள்

இதன் காரணமாக விஜய் செல்லும் இடம் முழுவதுமாக பல லட்சம்இளைஞர்கள் கூடி வருகிறார்கள். விக்கிரவாண்டி, மதுரை என அடுத்தடுத்து தனது மாநாட்டை நடத்தி அசத்தியுள்ளார் விஜய், அந்த வகையில் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய், கடந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சர்ச்சை

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அப்போது மாணவிகள் ஆர்வ மிகுதியில் டிவிகே மற்றும் களம் நமதே என கையெழுத்திட்டனர். இதனையடுத்து கையெழுத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.