மக்களோடு, மக்களுக்காக நிற்போம். எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர் ஓட்டுகள் சென்றுவிடும் என்பதால் பா.ஜ.க,வின் பி டீம், கைக்கூலி என்று அவதுாறு பரப்புகின்றனர். 

“நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர் ஓட்டுகள் சென்றுவிடும் என்பதால், பா.ஜ.க, பி டீம், கைக்கூலி என்று என்னைப் பற்றி திட்டமிட்டு அவதுாறு பரப்புகின்றனர்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

துாத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தேர்தலுக்கு எங்களுக்கென்று தனித்த வியூகம் கிடையாது. மக்களோடு, மக்களுக்காக நிற்போம். எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர் ஓட்டுகள் சென்றுவிடும் என்பதால் பா.ஜ.க,வின் பி டீம், கைக்கூலி என்று அவதுாறு பரப்புகின்றனர்.

கிறிஸ்துவர், இஸ்லாமியர் ஓட்டுகளை இன்றுவரை தி.மு.க., மட்டுமே அறுவடை செய்கிறது. இந்த விஷயத்தில், தி.மு.க., முழுமையாக ஏமாற்றுகிறது. அதையும் சிறுபான்மையின மக்கள் நம்புகின்றனர். ஆர்.எஸ்.எஸ், மற்றும் தி.மு.க ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையே பெரிய கொள்கை வேறுபாடெல்லாம் கிடையாது. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பிரதானமாக இருக்காது. தி.மு.க - அ.தி.மு.க என இரு கட்சிகள்தான் பிரதானமாக இருக்கும். வழக்கம் போல இன்னொரு கட்சியின் முதுகுக்கு பின்னால் இருந்து பா.ஜ.க செயல்படும்.

கரூரில் கூடிய கூட்டம் நடிகரை பார்க்க வந்த கூட்டம். அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தான் கூட்டத்துக்கு வந்த 41 பேர் இறந்துள்ளனர். ஆனால், சம்பவத்துக்குப் பின் 'நீ தான் காரணம்; இல்லையில்லை, நீ தான் காரணம்' என்று ஆளாளுக்கு ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கரூர் சம்பவம் நடந்ததில் தொலைக்காட்சிகளுக்கும் பெரிய பங்கு உண்டு. திரையரங்கில் முதல் காட்சி பார்க்கக்கூடிய கூட்டம், இப்போது தெருவுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க- அ.தி.மு.க என இரு கட்சிகளும் பெரும் பணம் வைத்துள்ளன. அவர்கள் எளிதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விடுவர். அதனால், அந்த கட்சிகளுடன் கூட்டணிக்கு போகத்தான், அனைத்து கட்சியினரும் விரும்புவர். எப்படியாவது, ஒருத்தரையும் விடாமல் கூட்டணிக்கு இழுத்துப் போட முயல்கின்றனர்.

என்னுடன் யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். காரணம், நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், கூட்டணிக்கு நான் வருவது போல வெளியில் செய்தி பரப்பிக் கொண்டிருப்பர். கரூர் சம்பவம் தொடர்பாக, விஜய் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு தமிழக அரசு பயப்படுகிறது என திருமாவளவன் சொல்லியுள்ளார். அதில் உண்மை உள்ளது. அவர், தி.மு.க கூட்டணியில் இருப்பதோடு, முதல்வர் அருகிலேயே இருக்கிறார். கரூர் சம்பவம் ஓராண்டுக்கு முன் நடந்து இருந்தால், கள்ளக்குறிச்சி சாராய பலி போல கண்டுகொள்ளாமல் இருந்திருப்பர்’’ எனத் தெரிவித்தார்.