'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை அரசு பள்ளிகளில் நடத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அலுவலகங்களில் இந்த முகாமை நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 45 நாளில் தீர்வு காணும் விதமாக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து இருந்தார். அதே வேளையில் இந்த முகாம் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது.
சர்ச்சையில் சிக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி , பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அரசு பள்ளிகள் நடத்துவதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அரசு பள்ளிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இடையூறு
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
என்ன மாதிரியான மனநிலை?
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், “ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை” என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாஎதிரியான மனநிலை?
மாணவர்கள் கல்வியை கெடுக்காதீர்கள்
ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
