- Home
- Tamil Nadu News
- கலர் கலரா திட்டத்திற்கு பெயர் வைத்தால் மட்டும் போதாது! ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள்
கலர் கலரா திட்டத்திற்கு பெயர் வைத்தால் மட்டும் போதாது! ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 45 நாட்களில் தீர்வு?
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சாதி சான்றிதழ் தொடங்கி பொதுமக்களுக்குத் தேவையான எந்தவித ஆவணமாக இருந்தாலும் உரிய சான்றிதழ்களுடன் முறையிடப்படும் பட்சத்தில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி, பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தின் தரப்படும் மனுக்கள் 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மிதப்பதாக தகவல் வெளியானது.
ஆற்றில் மிதந்த மனுக்கள்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றில் மிதந்து சென்ற மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். தமிழக முழுவதும் 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என மனுக்கள் கொடுத்த மக்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை சமூக ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து குற்றம் சாட்டியுள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திட்டங்களுக்கு கவர்ச்சியாக பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் இந்த பேட்ச்வொர்க் மாதிரி திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது. சமீபத்தில் தொடங்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" என்று அழைக்கப்படும் திட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றில் மிதக்கும் குறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மனுக்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
Keeping fancy names for schemes and wasting taxpayers’ money on publicity has become the hallmark of this patchwork-model DMK Government. The so-called “Ungaludan Stalin Scheme” launched recently has now been exposed as a set of petitions representing grievances were found… pic.twitter.com/NXT5P5X8qw
— K.Annamalai (@annamalai_k) August 29, 2025
கடந்த 4 ஆண்டுகளில், திமுகவின் உயர்ந்த தேர்தல் வாக்குறுதிகள் கூட சாக்கடையில் போய்விட்டன, இன்று, மக்களின் குறைகள் கூட குப்பைகளைப் போல வீசப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.