உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக மன அழுத்தங்களுடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என்று வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறை அலுவலர்களின் உயிர், உடமைகள் பாதுகாப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நெருக்கடியை குறைத்தல், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல், அரசு பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு 25% கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், தற்காலிக, ஒப்பந்த பணியிடங்களை கைவிட்டு, நிரந்தர நியமனம் செய்ய வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்ற ஊழியர்களை நிர்பந்திக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி “வருவாய்த்துறை தினம்” என அரசு அறிவிக்க வேண்டும் என்பதும் மாநாட்டில் கோரப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
